இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இதுவரை 73086 பேர் விண்ணப்பத்துள்ளனர். கொரோனா காரணமாக விண்ணப்பிப்பதற்காக கால அவகாசம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இன் படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகளை 25 விழுக்காடு இடங்களில் சேர்க்க வேண்டுமென 2013ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. இதன்படி தமிழகத்தில் மாணவர்கள் நடைபெற்று வருகிறது.
25 சதவீத இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க, மாணவர்களின் பெற்றோர்கள் https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் ஜூலை 5 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நுழைவு நிலை வகுப்புகளில் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பம் செய்யும் மாணவர்களின் இருப்பிடத்திற்கும், பள்ளிக்கும் இடையான தூரம் 1 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும்.
பெற்றோர்கள் மாணவரின் புகைப்படம், பிறப்பு சான்றிதழ், ஆதார் அல்லது குடும்ப அட்டை, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் , சிறப்பு பிரிவினர் எனில் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்த காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், கொரோனா பொதுமுடக்கத்தை கருத்தில்கொண்டு இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஆகஸ்ட் 13ம் தேதிவரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ஜூலை 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதிவரை 73,086 விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.