தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில் அதிகாரிகள் உடன் அரசு ஆலோசனை நடத்தி வந்தது. முன்னதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சில வாரங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பள்ளிகள் திறப்பை ஒட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் ஆலோசனை செய்தார்.
ஜூன் மாதத்தை பொறுத்தவரை 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்தே பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டுமின்றி வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படவும் வாய்ப்புள்ளது. தற்போது டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு பள்ளிக் கல்வித்துறையில் தமிழக அரசு அமல்படுத்தியுள்ள சிறப்பான திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து வருகிறார். மேலும் அந்நாட்டில் கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், செயல் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்கிறார். எனவே அவர் தமிழகம் திரும்பியதும் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பகிர்ந்திருக்கிறார். அதில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி வரும் 2024 – 2025ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் 6ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.
மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்கிறோம் என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை தொடங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளை திறக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும் முதன்மை கல்வி அலுவலர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.