தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதற்காக, மாநிலம் முழுவதும் 4107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்ட சூழலில், ஏப்ரல் 12- ஆம் தேதி முதல் 22- ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றன. இதனையடுத்து திட்டமிட்டபடி இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
அந்த வகையில், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.55% ஆக உள்ளது. வழக்கம் போலவே மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 94.53% ஆகவும் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 88.58% உள்ளது. மாணவர்களை விட 5.95% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவ, மாணவிகள் ஏற்கெனவே தேர்வுத்துறைக்கு தெரிவித்திருந்த செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டன. இதுதவிர, அரசுத் தேர்வு இயக்ககத்தின் இணைய தளங்களான www.results.nic.in, www.dge.tn.gov.in ஆகியவற்றின் மூலமும் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.