அரசு ஊழியர்-ஆசிரியர் சம்பள முரண்பாட்டை களைய நிதித்துறை செயலாளர் தலைமையில் கமிட்டி அமைப்பு தமிழக அரசு உத்தரவு | தமிழக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அளிக்கப்பட்ட ஊதிய உயர்வில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகவும், அதை களைய வேண்டும் என்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் முறையிட்டனர். இதையடுத்து சட்டசபையில் ஜனவரி 8-ந் தேதி பேசிய கவர்னர், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார். இதை அரசு கவனமுடன் பரிசீலித்தது. சம்பள முரண்பாடுகளை களைய ஒரு நபர் கமிட்டியை நியமிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, நிதித்துறை செயலாளர் (செலவீனம்) எம்.ஏ.சித்திக் தலைமையில் இந்த கமிட்டியை நியமித்து அரசு உத்தரவிடுகிறது. சம்பள முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட மனுக்களை இந்த கமிட்டி பரிசீலிக்க வேண்டும். அதை களையும் விதத்தில் அரசுக்கு இந்த கமிட்டி பரிந்துரைகளை 31.7.18 அன்றைய தேதிக்குள் அளிக்க வேண்டும். இந்த கமிட்டி அழைக்கும் போது அனைத்து துறையின் தலைவர்கள், செயலாளர்கள் ஆஜராகி விவரங்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.