2023 – 24 கல்வியாண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. nbe.edu.in மற்றும் natboard.edu.in ஆகிய இணைய தளங்களில் இருந்து தேர்வு முடிவுகளின் முழு விவரத்தை அறிந்து கொள்ளலாம்.
முதுநிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பதிவில், “தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (என்பிஇஎம்எஸ்) மீண்டும் ஒருமுறை மிக குறுகிய நாட்களுக்குள் தேர்வை நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளது”என்று தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த மார்ச் 5ம் தேதி, நீட் முதுநிலைத் தேர்வு அனைத்து மையங்களிலும் காலை 09:00 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள 277 நகரங்களில் உள்ள 902 தேர்வு மையங்களில் 2,08,898 தேர்வர்கள் இதில் கலந்து கொண்டனர்.
தேர்வு முடிவுகளை சரிபார்ப்பது எப்படி?
nbe.edu.in என்று இணையதளத்திற்கு சென்று தேர்வு முடிவுகளை சரிபார்த்துக் கொள்ளலாம்.
தேர்வுக்கு விண்ணப்பித்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs), இந்தியாவின் வெளிநாடு வாழ் குடிமக்கள் (OCIs), இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள்(PIOs), வெளிநாட்டு குடிமக்கள் (Foreign Nationals) ஆகிய பிரிவினர்கள் பொதுப் பிரிவினர்களாகவே கருதப்படுவர்.
50% அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு (All India Quota Seats) பட்டியல் தனியாக வெளியிடப்படும். மாநில தொகுப்பு இடங்களுக்கான (State Government Quota Seats ) மதிப்பெண் பட்டியலை அந்தந்த மாநிலங்கள் தனித்தனியே வெளியிடும்.