மூன்று ஆண்டுகளுக்கு கல்விக்கட்டணம் இல்லை என தனியார் கல்லூரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. கொரோனா காலத்தில் பெற்றோர்களின் சுமையை குறைக்க, இக்கல்வியாண்டில் சேரும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் மூன்று ஆண்டுகளுக்கும் இலவச கல்வி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும் விடுதி கட்டணத்திலும், 100 சதவீதம் சலுகையை கல்லூரி நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு அப்பகுதி மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதுகுறித்து கல்லூரி நிறுவனர் மக்கள் ராஜன் கூறுகையில், இக்கல்லூரியை 14 ஆண்டுகளாக நடத்தி வருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய, கல்விக்கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களுக்கு இலவசமாக படிக்க வாய்ப்பு வழங்கி வருவதாக கூறினார்.
இதுவரை இக்கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் மக்கள் ராஜன் ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் குழந்தைகள், இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
கொரோனா ஊரடங்கு பாதிப்பை கருத்தில் கொண்டு, இந்தாண்டு கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முழுமையாக இலவச கல்வியை கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்ததாக கூறும் மக்கள் ராஜன், இதுவரை 270 மாணவர்கள் இந்த ஆண்டு இக் கல்லூரியில் சேர்ந்து உள்ளதாக தெரிவித்தார்.
இன்னும் எத்தனை மாணவர்கள் கல்லூரியில் சேர வந்தாலும் அவர்களை சேர்க்க தயாராக இருப்பதாகவும் கூறிய அவர், இக்கல்லூரியில் மொத்தம் ஆறு பாடப்பிரிவுகள் இருப்பதாக கூறினார்.
ஒரு மாணவனுக்கு ஆண்டிற்கு 50,000 ரூபாய் கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டுக்கு 50 லட்சம் இழப்பு ஏற்படும் என்றாலும், படிக்க விரும்பும் எந்த ஒரு மாணவனின் கல்வியும் பணம் இல்லாததால் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக இதை செய்துள்ளதாக கூறுகிறார் மக்கள் ராஜன். இவரின் இக்கல்விச்சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.