
புதுச்சேரி: அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் 73 சதவீத மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். எஞ்சிய இடங்களை சீட் கிடைக்காத மாணவர்களுக்கு வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் 4,140 இடங்கள், கலைப் பிரிவில் 2,385 இடங்கள், தொழில் பிரிவில் 520 இடங்கள் என மொத்தம் 7,045 இடங்கள் உள்ளன.கடந்த கல்வி ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு நடைபெறவில்லை. அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்யப்பட்டனர். இதனால், இந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் எனக் கூறப்பட்டது.
அதற்கேற்ப அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 23ம் தேதி முதல் கடந்த 5ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரப்பெற்றது. இதனால், மாணவர் சேர்க்கையில் பெரும் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, திருவள்ளுவர், அன்னை சிவகாமி, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், ஜீவானந்தம் மற்றும் வ.உ.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடும் சிரமமாக இருக்கும் எனக் கூறப்பட்டது.
இருப்பினும், விதிமுறைப்படி பெறப்பட்ட விண்ணப்பங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 12ம் தேதி வெளியிடப்பட்டு, 14ம் தேதி கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மீதமிருந்த இடங்களுக்கான அரசு நிதி உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டு, 21ம் தேதி சேர்க்கை நடைபெற்றது.
இறுதிகட்டமாக கடந்த 22ம் தேதி தனியார் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 23ம் தேதி சேர்க்கை நடைபெற்றது.மூன்று கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் மொத்தமுள்ள 7,045 இடங்களில் 73 சதவீதமான 5,146 இடங்கள் மட்டுமே பூர்த்தியாகி உள்ளது. 27 சதவீதமான 1,899 இடங்கள் காலியாக உள்ளது.
புதுச்சேரியை பொறுத்த மட்டில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை குறிப்பிட்ட அரசு பள்ளிகளில் சேர்க்கவே விரும்புகின்றனர். இதனால், ஒரே மாணவர் குறிப்பிட்ட பள்ளிகளில் சேர வேண்டும் என்பதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பிப்பது வழக்கம்.
அவ்வாறே இம்முறையும் 8,000 மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இவர்களில் தாங்கள் விரும்பிய பள்ளிகள் மற்றும் விரும்பிய பாடப்பிரிவு இல்லாத காரணங்களால் பல மாணவர்கள் சேராமல் உள்ளனர். இவர்களுக்கும், பிளஸ் 1 வகுப்பில் சேர இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிட வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.