
கலை, அறிவியல் கல்லுாரிகளில் இறுதியாண்டு தவிர்த்துபிற மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை புதுச்சேரி பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்ததால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து கல்வி நிறுவனங்களும் மீண்டும் மார்ச் மாதம் மூடப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி புதுச்சேரி பல்கலை நிர்வாகமும் மார்ச் மாதம் முதல் அனைத்து தேர்வையும் தள்ளி வைத்தது
தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால், ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளது. அதனால், இணைப்பு கல்லுாரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வை மீண்டும் நடத்த புதுச்சேரி பல்கலைக்கழகம் ஆயத்த பணிகளை முடுக்கிவிட்டது.அதன்படி கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்டில் அடுத்தடுத்து செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருந்தன.
இந்நிலையில் பல்கலை தேர்வு ஆணையர் லாசர், புதுச்சேரி மத்திய பல்கலையில் இணைக்கப்பட்ட கலை, அறிவியல் கல்வி நிறுவனங்களில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து, பிற மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இளநிலை (யு.ஜி.,) பிரிவில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் முதுநிலை பிரிவில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உள்மதிப்பீடு கொண்டே மதிப்பீடு செய்யப்படும். தனியாக தேர்வு ஏதும் நடத்தப்படாது. இருப்பினும் அனைத்து இளநிலை, முதுநிலை மாணவர்களும் தேர்வு கட்டணம் கண்டிப்பாக செலுத்த வேண்டும்.
பல்கலையில், ஒன்று, மூன்று மற்றும் ஐந்தாம் செமஸ்டர்களை &’ஆட்-ஆன்&'(ஒற்றை பருவ) தேர்வு என்றும், இரண்டு, நான்கு மற்றும் ஆறாம் செமஸ்டர் தேர்வுகளை &’ஈவன் செமஸ்டர்'(இரட்டை பருவ) தேர்வுகள் என பிரித்து நடத்துகிறது.
மாற்றியமைக்கப்பட்ட கல்வியாண்டின்படி மார்ச் மாதத்தில் ஒற்றை பருவ தேர்வுகள் நடத்தப்படும். இதன்படி இரண்டாம் ஆண்டு மாணவர்கள், மூன்றாம் பருவ தேர்வையும், இறுதியாண்டு மாணவர்கள் ஐந்தாம் செமஸ்டரையும் ஏற்கனவே எழுதி விட்டனர்.
முதலாமாண்டு மாணவர்கள் மட்டு்ம் இன்னும் முதல் செமஸ்டர் தேர்வை எழுதவில்லை. எனவே முதலாமாண்டு மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் மட்டும் உள் மதிப்பீடு அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட உள்ளது. இதேபோல், இரண்டு, நான்கு, ஆறாம் உள்ளிட்ட &’ஈவன் செமஸ்டர்&’ மாற்றியமைத்த கல்வியாண்டின்படி, ஆகஸ்ட்டில் நடைபெற உள்ளது. இதில் இறுதியாண்டு மாணவர்களுக்கான ஆறாம் செமஸ்டர் கட்டாயம் ஆன்-லைனில் எழுத வேண்டும் என பல்கலை மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.
எனவே மீதமுள்ள இரண்டு, நான்கு செமஸ்டர் தேர்வுகள் உள்மதிப்பீடு அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட உள்ளது. பல்கலை நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு, கலை, அறிவியல் கல்லுாரிகளில் பயிலும் 25 ஆயிரம் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு ரத்தினை அறிவித்த பல்கலைக்கழகம் அரியர் தேர்வு குறித்து இன்னும் தெளிவுப்படுத்தவில்லை. தேர்வு ரத்து அறிவிப்பு, அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு பொருந்துமா என்பதை பல்கலை நிர்வாகம் அறிவிக்க வேண்டும்.