கொரோனா தொற்று காரமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்றது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துவிட்ட காரணத்தினால் பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயமாக நேரடி தேர்வுகளாக நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகிற 10ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத் தேர்வுகள் மே 6ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தேர்வு எழுதும் அறையில் மாணவர்கள் முகக்கவசம் அணிவது அவசியம் என, மருத்துவத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக குறையாத நிலையில், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும்,முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடதக்கது.