மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவது வழக்கம். பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கக் கூடிய அந்த நாட்களுக்கு பெயர்தான், அக்னி நட்சத்திரம். இந்த ஆண்டுக்கான கத்திரி வெயில் இன்று தொடங்கியுள்ளது. இந்த கத்தரி வெயில் வரும் 28ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு நீடிக்க உள்ளது.
அக்னி நட்சத்திர காலகட்டத்தில், வெயில் வழக்கத்தைவிட அதிகம் சுட்டெரிக்கும். தமிழகத்தில் ஏற்கெனவே பல மாவட்டங்களில் வெயில் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிய நிலையில், பகலில் வீசும் அனல்காற்றால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், மாணவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சருடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வெழுத பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது என்றும், வழக்கமான வகுப்புகளுக்கு வருகை தர வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை இந்த முடிவை எடுத்திருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.