
பருவமழை முன்னெச்சரிக்கையாக பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு | வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் கூறியிருப்பதாவது:- பழுதடைந்த கட்டிடங்கள் பல பள்ளி வளாகங்களில் பழுதடைந்த மற்றும் பாதுகாப்பற்ற முறையில் பல கட்டிடங்கள் இருக்கின்றன. கடந்த காலகட்டங்களில் இதுபோன்ற கட்டிடங்களால் காயங்கள், உயிரிழப்புகள் போன்ற சம்பவங்கள் குறிப்பாக பருவமழை காலங்களில் நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற கட்டிடங்கள் நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாத சூழ்நிலையில் அவை கொசு உற்பத்திக்கும் ஏற்றவிதமாக அமைந்துள்ளன. பள்ளி வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களை எல்லாம் அதுபோன்ற கட்டிடங்கள் ஆக்கிரமித்துள்ளதோடு பள்ளி மாணவர்களுக்கு அந்த சூழ்நிலை குறித்த தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ளாட்சி அமைப்புகளால் கட்டப்பட்ட இதுபோன்ற பள்ளிகளை அவர்கள் தான் அப்புறப்படுத்த வேண்டும். பஞ்சாயத்து யூனியன் கட்டிடங்களை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தகுந்த உத்தரவுகளை வழங்கி முன்னுரிமை கொடுத்து அந்த கட்டிடங்களை அகற்ற வேண்டும். தனிக்கவனம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தாங்கள் பராமரித்துவரும் அதுபோன்ற கட்டிடங்களை அப்புறப்படுத்துவதற்கு அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இந்த பணியில் ஈடுபட வேண்டும். இதுபோன்ற கட்டிடங்கள் பற்றிய பட்டியலை பெற்றுக்கொண்டு கலெக்டர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவுரைகளை பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே இதுபோன்ற முகமைகள் மூலம் பழுதடைந்த கட்டிடங்களை அப்புறப்படுத்துவதில் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே இருக்கும் கட்டிடங்களை தூய்மையாக, உறுதியானதாக வைத்திருப்பதற்கு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். இந்த கடிதம் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நவம்பர் 15-ந் தேதிக்குள் அறிக்கையை அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு ஒவ்வொரு ஆண்டும் இதுபோல பருவமழை காலங்களில் பழுதடைந்த கட்டிடங்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறைக்கும், அதிகாரிகளுக்கும் அரசு உத்தரவு பிறப்பித்தாலும், அதை சரிவர செய்வது இல்லை என்பது ஆசிரியர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்த ஆண்டு எடுக்கப்படும் பட்டியலின் அடிப்படையில் பழுதடைந்த, பாதுகாப்பற்ற கட்டிடங்களை அப்புறப்படுத்துவதில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பது கல்வி ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.