உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் வேலையின்மையின் உச்சம் என கருத்து | உயர் நீதிமன்ற துப்புரவு பணியாளர் மற்றும் சுகாதார பணியாளர் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையில் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் என்பது வேலையின்மையின் உச்சம் என்ற கருத்து எழுந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளை ஆகியவற்றில் 68 துப்புரவு பணியாளர் மற்றும் 59 சுகாதார பணியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி ஆகிய வகுப்பினருக்கு அதிகபட்ச வயதாக 35-ம், இதர வகுப்பினருக்கு அதிகபட்ச வயதாக 30-ம், ஏற்கெனவே அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வயதாக 45-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற வளாகத்தை தினமும் கூட்டித்தள்ளி, கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் துப்புரவு மற்றும் சுகாதார பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 3 ஆயிரத்து 612 பேரில் 2 ஆயிரத்து 569 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர் களுக்கு எழுத்துத்தேர்வு கடந்த அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் நடத்தப்பட்டது. இப் பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் மற்றும் முதுகலை மற்றும் எம்ஃபில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 75 மதிப்பெண் களுக்கு நடத்தப்பட்ட எழுத்துத்தேர்வில் 23 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்ற அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில், எந்த தொலைபேசி எண்ணில் இருந்து போலீஸை அழைப்பாய்? எந்த ஆண்டு நாம் விடுதலை பெற்றோம்? கப்பலோட்டிய தமிழன் யார்? நம்முடைய சுதந்திர தினம் எது? தேசிய சின்னம், பறவை, மரம் எது? என 8-ம் வகுப்பு தரத்திற்கேற்ப எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டதால், எழுத்துத்தேர்வில் பங்கேற்ற பெரும்பாலானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக உயர் நீதிமன்ற வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உயர் நீதிமன்ற அதிகாரிகள் சிலர் கூறும்போது, ”அதிகமான கல்வித்தகுதி உடையவர்களை இந்த பணி களுக்கு விண்ணப்பிக்கக் கூடாது என தடுக்க முடியாது. ஏனெனில் 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் யார் வேண்டுமென்றாலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அதே நேரம் துப்புரவு அல்லது சுகாதார பணியாளர் பணியிடம் கிடைத்துவிட்டால், ஒரு பட்டதாரி தனது கல்வித் தகுதியை வைத்தே குறைந்த ஆண்டுகளில் ரீடர், உதவியாளர், உதவி செக்க்ஷன் அலுவலர், செக்க்ஷன் அலுவலர், உதவிப்பதிவாளர் என பதவி உயர்வில் இணைப்பதிவாளர் அந்தஸ்துக்கு செல்ல வாய்ப்புள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. வேலையின்மை காரணமாக பொறியியல் பட்டதாரிகள் வெளியிடங்களில் இதைவிடக் குறைவான ஊதியத்துக்கு வேலை பார்ப்பதால், துணிந்து விண்ணப்பித்துள்ளனர். மேலும் ஒரு துப்புரவு பணியாளராக பணியில் சேருபவர், தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு முடித்து சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றால் அவர் நீதிபதி யின் நேர்முக உதவியாளராக செல்ல முடியும். இதனால் இந்த பணியிடங்கள் கிடைத்தால் போதும் என்ற அடிப்படையில் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்” என்றனர். இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.ராதா கிருஷ்ணன் கூறும்போது, ”இது வேலையின்மையின் உச்சம். இதை சமீபத்தில் கூட நீதியரசர் என்.கிருபாகரன் இந்தியா முழுவதும் எத்தனை பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர்? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி சுட்டிக்காட்டியுள்ளார். உயர் நீதிமன்றத்தின் இணையதளத்துக்குச் சென்று விபரங்களை அறிந்து கொள்ளுங்கள் எனக் கூறுவது விளம்பரமே ஆகாது. அது வெறும் தகவல். எனவே உயர் நீதிமன்ற துப்புரவு மற்றும் சுகாதார பணிக்கு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பாணையை அனைத்து விவரங்களுடன் தமிழிலும் வெளியிட்டு அதன்பிறகு தான் தேர்வு நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது வழக்கின் சாரம்சம். இந்த பணிநியமனம் எங்களது வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே அமையும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை எங்களுக்கு சாதகமாக இந்த விளம்பரம் செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால், இவர்களின் பணிநியமனமும் செல்லாததாகி விடும். ஆனால் உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணியாளராக உள்ளே வந்து விட்டால் பணிப்பாதுகாப்பு மற்றும் பதவிஉயர்வு எளிதாக கிடைக்கும் என்பதால் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் இப்பணிக்கு தைரியமாக விண்ணப்பித்து அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்” என்றார். | ஆர்.பாலசரவணக்குமார்