சிறுசேமிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை தனியார் வங்கிகளிலும் சேமிப்பு திட்டங்களை விற்க முடிவு | மக்களிடையே சிறுசேமிப்பு திட்டங்களை ஊக்குவிக்க அரசு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இதுவரை தபால் அலுவலகங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த தேசிய சேமிப்பு பத்திரம் (என்எஸ்சி), அஞ்சலக சேமிப்பு மற்றும் மாதாந்திர சேமிப்பு திட்டங்களை வங்கிகள் மூலமும் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அரசு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தேசிய சேமிப்பு திட்டம் 1981 (கால வரையறையுடன் கூடியது), தேசிய மாதாந்திர சேமிப்பு திட்டம் 1987, தேசிய தொடர் சேமிப்பு திட்டம் 1981 மற்றும் என்எஸ்சி 8 உள்ளிட்ட திட்டங்கள் வங்கிகளில் விற்பனை செய்யப்படும். இத்திட்டங்கள் அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் முன்னணி தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கிகளிலும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இம்மூன்று தனியார் வங்கிகளும் பிராவிடன்ட் பண்ட் , கிஸான் விகாஸ் பத்திரம் 2014, சுகன்ய சம்ரிதி கணக்கு, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் 2004 ஆகியவற்றுக்கான சேமிப்பு திட்டங்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளும் சேமிப்புத் திட்டங்களை விற்பனை செய்வதன் மூலம் இத்தகைய சேமிப்பு வசதிகள் எளிதில் மக்களுக்கு கிடைக்கும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களும் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படுகின்றன. பொது சேம நல நிதி (பிபிஎப்) திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.8 சதவீதமாகவும் கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி 7.5 சதவீதமாகவும் உள்ளது. இவ்விரண்டு திட்டங்களுக்கான முதிர்வு காலம் 115 மாதமாகும். பெண் குழந்தை சேமிப்புத் திட்டமான சுகன்ய ஸ்மிருதி சேமிப்புத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 8.3 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு சேமிப்புத் திட்டத்துக்கு 8.3 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புகளுக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படுகிறது. ஆதார் மையங்கள் வங்கி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான மையங்கள் இதுவரை 2,300 வங்கிக் கிளைகளில் மட்டும்தான் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த மாத இறுதிக்குள் 15,300 கிளைகளில் இத்தகைய வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் செப்டம்பர் 31-ம் தேதியுடன் ஆதார் எண்ணை வங்கி சேமிப்புக் கணக்குடன் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பிறகு அக்டோபர் 31 வரை என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள எண் வழங்கும் யுஐடிஏஐ அமைப்பானது மொத்தம் 15,315 மைய ங்கள் உருவாக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை 2,305 மையங்களே உருவாக்கப்பட்டுள்ளன. வங்கிகள் தங்களுக்குள்ள மொத்த கிளையில் 10 சதவீத அளவுக்கு ஆதார் மையங்களை தொடங்கி ஆதார் எண் சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இவ்வாறு செய்யத் தவறும் வங்கிகளுக்கு ₹20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட கிளைகளால் விடுபட்டுப் போன பிராந்தியங்களின் எண்ணிக்கைக்கேற்ப அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.