பிளஸ் 2 துணை தேர்வுகள் இன்று தொடங்கி வரும் 19 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
தமிழகத்தில் கொரோனா பரவலால் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத்தோ்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தோ்ச்சி செய்யப்பட்டனா். மாணவா்களின் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 செய்முறைத்தோ்வு அடிப்படையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு தோ்வு முடிவுகள் கடந்த ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்பட்டன.
அரசு வழங்கிய மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் தனித்தோ்வா்களுக்கான துணை தேர்வின் போது எழுதலாம் என அறிவித்ததோடு, தேர்வுக்கான அட்டவணையையும் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி பிளஸ் 2 துணை தேர்வுகள் இன்று துவங்கி வரும் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழி பாடம் நடைபெறுகிறது.
இந்த தோ்வை பிளஸ் 2 தோ்வு முடிவில் திருப்தியில்லாத பள்ளிகளில் படித்த 25 மாணவா்கள் மற்றும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனித்தோ்வா்கள் எழுதுகின்றனர். தோ்வு மையங்களில் தனிநபா் இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்பாடு உள்பட கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தோ்வுத்துறை அறிவுறுத்தியது. அதனை பின்பற்றி மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.
அதன்படி, தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை சென்னை மயிலாப்பூரில் மத்திய சென்னை மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட பி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் அனிதா நேரில் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், திருச்சி தனியார் பள்ளியில் (சாவித்ரி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி) உள்ள தேர்வு மையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.