பிளஸ் 1,பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுதேர்வுகள் எழுதும் மாணவர்கள் இலவசமாக பஸ்சில் செல்லலாம்! | மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 1,பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுதேர்வுகள் நடைபெற இருப்பதால் தேர்வு மையத்திற்கு செல்லும் மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாக சென்று திரும்ப அனுமதிக்க வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: 1.3.2018 முதல் 16.4.2018 வரை மேல்நிலை கல்வி, மேல்நிலை இரண்டாம் ஆண்டு, முதலாமாண்டு அரசு பொது தேர்வுகளும் மற்றும் 16.3.2018 முதல் 20.4.2018 வரை 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதால் இத்தேர்வுகளில் கலந்துகொள்ளும் பள்ளி மாணவர்கள் வைத்துள்ள இலவச பேருந்து பயணச்சீட்டின் அடிப்படையிலேயே அவர்கள் இருப்பிடத்தில் இருந்து தேர்வு மையத்திற்கு தேர்வு நாட்கள் முடியும் வரை மாநகரப்பேருந்துகளில் இலவசமாக சென்று திரும்ப அனுமதிக்குமாறு மாநகர போக்குவரத்து கழக நடத்துநர்கள், ஓட்டுநர்களுக்கு உத்தரவிடப்படுகிறது. எனவே, அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் உத்தரவை தவறாமல் கடைபிடித்து பள்ளி மாணவர்கள் இருப்பிடத்தில் இருந்து தேர்வு மையம் வரை சென்று திரும்ப அவர்களை இலவசமாக பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். மேலும், உதவி மேலாளர்கள், பயணசீட்டு பரிசோதகர்களுக்கு உத்தரவு குறித்து அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். பள்ளி நேரங்களில் எக்காரணத்தை கொண்டும் பேருந்துகளை நிறுத்தி காலம் தாழ்த்தாமல் மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல் பயணம் செய்யும் வகையில் பேருந்து இயக்கிட ஏதுவாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.