அடுத்த கல்வி ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வழியாக படிக்கலாம் துணைவேந்தர் தகவல் | சென்னை பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் வழியாகவும் படிக்கலாம் என்று துணைவேந்தர் பி.துரைசாமி கூறினார். சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் துணைவேந்தர் பி.துரைசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் அக்டோபர் 1-ந் தேதி முதல் 7-வது ஊதியக்குழு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான நிலுவைத்தொகை அவர்களுக்கு வழங்கப்படும். இந்த பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகள் 91 துறைகள் மூலம் கற்பிக்கப்படுகின்றன. அந்தந்த துறை விருப்பப்படி ஆன்லைனில் யாரும் எங்கிருந்தும் படிக்கலாம். வேலைவாய்ப்பை கருதி இந்த வசதி கொண்டு வரப்படுகிறது. இந்த வசதி அடுத்த கல்வி ஆண்டு (2018-2019) முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கு சிண்டிகேட்டில் அனுமதி பெறப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வழக்கம்போல நேரடியாக படிக்கலாம். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அரசு உதவி பெறும் கல்லூரியில் முதல்வர் நியமனம் குறித்து சென்னை பல்கலைக் கழக சிண்டிகேட் கூட்டத்தில் அனுமதி வழங்க வேண்டும். அப்போது தான் கல்லூரி கல்வி இயக்குனரகம் அந்த முதல்வருக்கு சம்பளம் வழங்கும். ஆனால் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் புதிதாக முதல்வர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் அவர் ஆராய்ச்சி படிப்பில் அறிக்கை தாக்கல் செய்தது அடுத்தவர் தாக்கல் செய்ததை அப்படியே காப்பி அடித்தது தெரிந்தது. எனவே அவர் நியமனம் செல்லாது என்று சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.