அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. அறிக்கை | அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. அறிக்கை தாக்கல் செய்தது. நாடு முழுவதும் மருத்துவ கல்விக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு என்ற நுழைவுத்தேர்வை மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) கொண்டுவந்தது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரியதையும் மத்திய அரசு ஏற்கவில்லை. எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இந்த நீட் தேர்வில் வினாத்தாள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டு இருந்ததாக புகார் எழுந்தது. பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கேட்கப்பட்டு இருந்த வினாக்கள் மிகவும் கடினமானதாக இருந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.எஸ்.இ. சார்பில் ஆஜரான வக்கீல் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், அடுத்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வின்போது நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் வினியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.