
744 சிறப்பு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் | மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் சுகாதாரத் துறைக்கு என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை வெளிப்படையாக உடனுக்குடன் நிரப்பி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் கே.பழனிசாமி கடந்த ஜூலை 13-ம் தேதி இந்த தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட 516 செவிலியர்களுக்கும், கடந்த 13-ம் தேதி 1,013 உதவி டாக்டர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். 10,790 மருத்துவர்கள் மற்றம் சிறப்பு மருத்துவர்கள், 9,706 செவிலியர்கள் உட்பட 23,571 பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தற்போது 744 சிறப்பு மருத்துவர்கள் தேர்வு செய்து பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் கடந்த 20-ம் தேதி வெளியிடப்பட்டது. அக்.10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.