
25 % ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர அக்.10 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு | தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர), வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் இந்த இடங்களை நிரப்புவதற்கு ஆன்லைன் விண்ணப்ப முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரையில் 82 ஆயிரத்து 909 குழந்தைகள் தனியார் பள்ளிகளில் இடம் கிடைக்கப்பெற்று பயன் அடைந்துள்ளனர். இந்த இடஒதுக்கீட்டில் காலியாகவுள்ள 41 ஆயிரத்து 832 இடங்களில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 25-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஆன்லைனில் விண்ணப்பிபதற்கான கடைசி தேதி அக்டோபர் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ஒதுக்கீட்டில் சேர www.dge.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலர், மாவட்ட கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, உதவி தொடக்கக்கல்வி அதிகாரி, வட்டார வள மேய மேற்பார்வையாளர் ஆகியோரின் அலுவலகங்களில் எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக ஆன்லைனில் விண்ணப்பிக் கலாம்.