குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை முடிக்காதவர்களுக்கு கடைசியாக 2 வாய்ப்புகள் அளிக்கப்படும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு | 2010-ம் ஆண்டு வரையில் பொறியியல் படிப்பை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (7 ஆண்டுகளுக்குள்) முடிக்காதவர்களுக்கு கடைசியாக 2 வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று தூய்மை இந்தியா பணி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நிருபர்களுக்கு அமைச்சர் அன்பழகன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொறியியல் படிக்கும் மாணவர்கள் 7 ஆண்டுகளுக்குள் படிப்பை முடித்துவிட வேண்டும் என்பது விதிமுறை. இந்த நிலையில், இந்த காலக்கெடுவுக்குள் பொறியியல் முடிக்காத மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்க கூடுதல் காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்று முதல்வருக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். அவர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த அரசு, அவர்களுக்கு இறுதியாக 2 வாய்ப்புகள் அளிக்க முன்வந்துள்ளது. அதன்படி, 2010-ம் ஆண்டு வரையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை முடிக்காதவர்களின் நிலைமையை சிறப்பு நிகழ்வாக கருதி, அவர்களுக்கு இன்னும் 2 பருவ காலங்களில் (2018-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு) மட்டும் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும். அவர்களுக்கான தனி தேர்வுக்கால அட்டவணை, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம் செலுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இந்த சிறப்பு தேர்வுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இடத்தில் மட்டும் நடத்தப்படும். இனிமேலும் இதுபோன்ற கூடுதல் வாய்ப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்படாது. இதை மனதில்கொண்டு மாணவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த 2 தேர்வு வாய்ப்புகளையும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு அனைத்துப் பாடங்களிலும் தேர்வெழுதி தேர்ச்சிபெற்று படிப்பை முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 2011-ம்முதல் தேர்வு எழுவோருக்கு காலக்கெடு 7 ஆண்டுகள் மட்டுமே. இந்த கூடுதல் காலஅவகாசம் மூலம் ஏறத்தாழ 40 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அமைச்சர் அன்பழகன் கூறினார்.