சென்னை: கள பயிற்சிக்கு பதில், மத்திய அரசின் திறந்தநிலை ஆன்லைன் பாடத்தை படித்து, அந்த சான்றிதழை வழங்கலாம் என, ன்ஜினியரிங் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை அறிவுறுத்தியுள்ளது.
நேரடி களப்பயிற்சிதமிழகத்தில், பி.இ., – பி.டெக்., படிப்புகளை நடத்தும் இன்ஜினியரிங் கல்லுாரிகள் மற்றும் அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், அந்த பல்கலையின் பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. பாடம் நடத்துதல், தேர்வு முறை மற்றும் மாணவர்களுக்கான களப்பயிற்சி குறித்து, அண்ணா பல்கலையின் கல்வி கவுன்சில் முடிவு செய்து விதிகளை அறிவிக்கும்.
அதன்படி, இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள், தங்களின் கல்வித்திறனை செயல்முறையில் அறிந்து கொள்ள, தொழிற்சாலைகள் மற்றும் தங்கள் பாடம் சார்ந்த நிறுவனங்களில், நேரடி களப்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
‘இன்டர்ன்ஷிப்’ எனப்படும், இந்த களப்பயிற்சிக்காக, 3 கிரெடிட் மதிப்பெண்கள் வரை வழங்கப்பட்டு, அந்த மதிப்பெண் சான்றிதழில் சேர்க்கப்படும்.
மாற்று ஆலோசனை
இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக, கல்லுாரிகள் திறக்கப்படாததால், இன்ஜினியரிங் மாணவர்கள் ஆன்லைன் வழியில் மட்டுமே பாடம் படிக்கின்றனர். அவர்கள், இன்டர்ன்ஷிப் செல்ல முடியாத சூழல் உள்ளது.
ஆனால், அதற்கான மதிப்பெண் பெற வேண்டியது அவசியம்.எனவே, மாணவர்களுக்கு மாற்று ஆலோசனையை, அண்ணா பல்கலை வழங்கியுள்ளது.இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கான மதிப்பெண்களுக்கு பதில், மாணவர்கள் மத்திய அரசின் ஸ்வயம் மற்றும் தேசிய உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., – என்.பி.டி.இ.எல்., போன்ற திறந்தநிலை ஆன்லைன் வழி தடத்தில், சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்ளலாம்.
அண்ணா பல்கலையால் பட்டியலிடப்பட்ட படிப்புகளில் மட்டும் மாணவர்கள் சேரலாம்.படிப்பை முடித்து, அதன் சான்றிதழை சமர்ப்பித்தால், இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு இணையான மதிப்பெண், சான்றிதழில் சேர்க்கப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த ஆண்டு மட்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.