ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாதாந்திர பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த ஓராண்டாக மூடப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு கற்றல் மற்றும் கற்பித்தலில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனை களைய மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் பல்வேறு வகை பயிற்சிக்கான கையேடுகள் மூலம் பயிற்சி அளிக்க அரசு முடிவு எடுத்துள்ளது.
அதன்படி 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாழ்த்து அட்டை தயாரித்தல், எழுத்துகள் கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடிதம் எழுதுதல் ,வாசித்தல் உள்ளிட்ட பயிற்சிகளும், 9 மற்றும் 10 ஆகிய வகுப்புகளுக்கு பாடம் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனியாக கையேடு தயாரித்து ஆசிரியர்கள் மூலமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.