சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், அனைத்து வகை பள்ளிகளிலும், பருவ இடைத்தேர்வுகள் துவங்கி உள்ளன.
தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் தடுப்புக்காக, பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் இன்னும் நடத்தப்படவில்லை. ஆன்லைனில் மட்டும் பாடங்கள் நடத்தப்படுகின்றன. புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள், கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அறிந்து கொள்வதற்கான, பருவ இடைத்தேர்வுகள் இன்று துவங்குகின்றன.அனைத்து வகை தனியார் பிரைமரி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளிலும், அரசு பள்ளிகளிலும், ஆன்லைன் வழி தேர்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மாணவர்களுக்கு கொள்குறி வகை வினாத்தாளும், விரிவாக எழுதும் வகையிலும், இரண்டு வகையாக, இந்தத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் ஆன்லைன் வழி கற்றலில் முன்னேற்றம் பெறுகின்றனரா அல்லது கற்பித்தல் முறையில் இன்னும் மாற்றம் தேவையா என்பதை, இந்த தேர்வுகளின் வழியே ஆய்வு செய்ய, பள்ளிகள் திட்டமிட்டு உள்ளன.