
சென்னை: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பாடத்திட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி, ‘எழுதுக இயக்கம்’ சார்பில், நான்காம் வகுப்பு மாணவி முதல், கல்லுாரி மாணவர்கள் வரை எழுதிய 100 புத்தகங்களை, நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பெற்றுக் கொண்டார்.
பின், அமைச்சர் அளித்த பேட்டி:
பள்ளிகள் திறப்பு குறித்து, மருத்துவ வல்லுனர்கள் குழுவிடம் கலந்து ஆலோசிக்கப்படும், பெற்றோரிடம் கருத்து கேட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் கல்விக் கட்டணமாக, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் 75 சதவீதம்; பாதிக்கப்படாத பெற்றோரிடம் 85 சதவீதம் வசூலிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தாண்டி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஆதாரத்துடன் புகார் வந்தால், அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வை, ‘ஆன்லைன்’ வழியாகவோ, நேரடியாகவோ நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. தனியார் பள்ளிகளில் இருந்து, 2.04 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர், அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் வழங்கப்பட்டது திருப்தி அளிக்காததால், 23 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அளித்துள்ளனர்.
பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 என, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. கொரோனாவால் இறந்த ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.