தமிழ்நாட்டில் ஆறு முதல் 10ஆம் வகுப்பு வரை மீண்டும் கணினி அறிவியல் பாடங்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டிலேயே இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த 2006-11ஆம் ஆண்டில் அப்போதைய திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்ட முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதையடுத்து, 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் 2011ம் ஆண்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு, அதற்குரிய பாடப் புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டது. 2011ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், 6 முதல் 10ம் வகுப்பு வரை முந்தைய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட கணினி அறிவியல் பாடத்திட்டம் கைவிடப்பட்டது.
மேலும், அதற்காக அச்சடிக்கப்பட்ட சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பாடப்புத்தகங்கள் கழிவுகளாக மாற்றப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு பாடநூல் கழகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது.
இந்நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால், ஆறு முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த கல்வியாண்டு முதல் இத்திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணினி அறிவியல் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தினால் சுமார் 60 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள் என்றும், இத்திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் கணினி அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கணினி ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் அரசு பள்ளிகளில் 3 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் செயல்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் கணினி ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.