
தனி நபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு | ஆதார் அட்டைக்கு எதிரான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தனி நபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை என்று அதிரடி தீர்ப்பு வழங்கி இருக்கிறது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:- ஒருவரின் அந்தரங்கம் என்பது அவருடைய வாழ்க்கையின் உள்ளார்ந்த பகுதி ஆகும். அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவின் கீழ் ஒருவரின் அந்தரங்கம், அதாவது தனிமனித ரகசியம் பாதுகாக்கப்படுகிறது. அந்தரங்கம் என்பது தனிமனித சுதந்திரத்தின் கீழ் வருவது அகும். தனி மனித சுதந்திரம் வாழ்வதற்கான உரிமை மற்றும் சுதந்திரத்தின் அடிப்படையில் வருகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 1954-ம் ஆண்டு எம்.பி.சர்மா வழக்கில் 6 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிலும், பின்னர் 1961-ம் ஆண்டு கரக்சிங் வழக்கில் 8 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிலும் அந்தரங்கம் என்பது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையின் கீழ் வராது என்று கூறப்பட்டதை ஏற்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர். நீதிபதி ஏ.எம்.சப்ரே தனிப்பட்ட முறையில் தீர்ப்பில் சில கருத்துகளை தெரிவித்து உள்ளார். அவர் கூறி இருப்பதாவது:- குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் அந்தரங்கத்தை பாதுகாப்பதற்கான அடிப்படை உரிமை இருப்பதை அரசியல் சாசனத்தின் 3-வது பிரிவு அங்கீகரித்து உள்ளது. சாதி, மதம், இனம் போன்ற பாகுபாடுகள் இன்றி ஒவ்வொருவரும் கண்ணியமாக வாழும் உரிமை சட்டத்தின் ஆட்சி நடைபெறும் சமுதாயத்தில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த உரிமையை அரசியல் சாசனம் வழங்கி இருக்கிறது. ஆனால் இந்த ஒட்டுமொத்த உரிமையும் சில நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்பதையும் ஒதுக்கிவிட முடியாது. சட்டத்துக்கு உட்பட்டு சமூக, தார்மீக மற்றும் பொதுநலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சில நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.