வாட்ஸ்அப் இனிமேலும் இலவச சேவையாக தொடரப்போவதில்லை. கட்டண சேவையை அறிமுகம் செய்ய உள்ளது உலகின் மிகப்பெரிய மெசேஜ் ஆப்களில் ஒன்றான வாட்ஸ்அப்.
2014ல் பேஸ்புக் நிறஉவனம் வாட்ஸ்அப் நிறுவனத்தை 19 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. கட்டணம் இல்லாத, விளம்பரமும் இல்லாத ஒரு ஆப்புக்கு இவ்வளவு அதிக விலை கொடுத்து பேஸ்புக் வாங்கியது ஏன் என்ற கேள்வி அப்போது எல்லோரிடமும் எழுந்தது.
இதற்கான விடைதான் தற்போது வெளியாகியுள்ள தகவல். ஆம்.. வாட்ஸ்அப் இனிமேல் கட்டண சேவை அளிக்கும் ஆப் என்ற வகையில் மாறப்போகிறது.
வர்த்தக நோக்கம் கட்டண சேவை என்றதும், நெட்டிசன்கள் ஆதங்கப்பட தேவையில்லை. வாட்ஸ்அப்பில் வர்த்தக டூல் ஒன்று சேர்க்கப்படுகிறது. அதை பயன்படுத்துவோருக்குதான் கட்டணம். இந்தியாவில் 200 மில்லியன் பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறார்கள், அவர்களை குறிவைத்து வர்த்தக நிறுவனங்கள் இந்த கட்டண சேவையை பயன்படுத்தலாம்.
விளம்பரதாரர்கள்
இந்தியாவில்தான் வேறெந்த நாட்டைவிடவும் அதிகப்படியானோர் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறார்கள். இவர்களை, வணி நிறுவனங்களோடு இணைப்பதுதான் புதிய கட்டண சேவையின் நோக்கம். டிவிட்டர், பேஸ்புக் போலவே, வர்த்தக நிறுவனங்கள் ரியல்தான் என்பதை உறுதி செய்ய வெரிஃபைட் குறியீடு பயன்படப்போகிறது.
வாடிக்கையாளர்கள் தொடர்பு
கட்டணம் செலுத்தும் வணிக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும். இவற்றை பிளாக் செய்யவும் வாடிக்கையாளர்களுக்கு வசதி உண்டு. உணவகங்கள், சேவை நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரை வாட்ஸ்அப்பில் தொடர்புகொள்ள இது உதவும்.
பல சேவைகளுக்கு வாய்ப்பு
புக்மைஷோ ஏற்கனவே வாட்ஸ்அப்புடன் இணைந்து இதுபோன்ற சேவையை வெள்ளோட்ட அடிப்படையில் செய்து வருகிறது. எப்போது வெரிஃபைடு குறியீட்டுடன் வாட்ஸ்அப் தனது வணிக சேவையை தொடங்கப்போகிறது என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் வீசாட் என்ற மெசேஜ் ஆப், பிறகு மேம்படுத்தப்பட்டு, கார், ஆட்டோ புக் செய்வது, பில் கட்டுவது உள்ளிட்ட பல சேவைகளை அளிக்க தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.