கட்டாய இலவச கல்விச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவு குழந்தைகளை சேர்க்க 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் அறிவித்துள்ளார். இதுகுறித்து, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள அம்சங்களில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் 25 சதவீதம் சேர்க்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் ஆன்லைன் மூலம் குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகளை தெரிவு செய்யும் பணி கடந்த மே மாதம் அனைத்து பள்ளிகளிலும் நடந்தது. அப்படி தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளில் ஒரு சிலர் குறிப்பிட்ட பள்ளியில் சேர்வதற்கு வரவில்லை.
அதனால் ஏற்பட்ட காலியிடங்களில் மீண்டும் குழந்தைகளை சேர்க்க ஜூலை மாதம் நேரடி சேர்க்கை வழங்கப்பட்டது. அதற்கு பிறகு ஜூலை மாதமும் சேர்க்கை நடத்தப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 82 ஆயிரத்து 909 குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். இதற்கு பிறகும் 41 ஆயிரத்து 832 இடங்கள் காலி ஏற்பட்டுள்ளது. இந்த இடங்களில் குழந்தைகள் சேர்க்கப்பட உள்ளதால் தகுதி உடையவர்கள் 11ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கருப்பசாமி தெரிவித்துள்ளார்.