TRB சிறப்பாசிரியர் போட்டித்தேர்வு | ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தடை கோரி வழக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு | தமிழகம் முழுவதும் ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனங்களை மேற்கொள்ள தடை விதிக்கக்கோரி தொடரப் பட்ட வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலர் ஆசிரியர் தேர்வு வாரியம் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கொழுந்துரையைச் சேர்ந்த திருப்பதி என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு: நான் அரசுப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஓவிய ஆசிரியர், உடற்கல்வி, இசை, தையல் உள்ள ஆசிரியப் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை 20-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது. ஓவிய ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தமிழக அரசின் தொழிற்கல்வி இயக்குநரகம் அளித்து வரும் கவின்கலை டிப்ளமோ படிப்பு அல்லது சென்னை மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் அளித்து வரும் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஓவிய ஆசிரியர் பணிக்கு இந்த கல்வித்தகுதி அதிகபட்சமானது. பள்ளிக்கல்வித் துறை சிறப்பு விதிக்கு புறம்பாக நிரந்தர ஓவிய ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறப்பு விதிகளின்படி போதிய கல்வித் தகுதி மற்றும் அனுபவம் பெற்றுள்ள என்னைப் போன்றவர்கள் நிரந்தர ஓவிய ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. எனவே சிறப்பு விதிகளின்படி போதிய கல்வித்தகுதியை பெற்றவர்களுக்கும் நிரந்தர ஓவிய ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதி பதி எஸ்.எம்.சுப்ரமணியம், இது தொடர்பாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவை 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.