நீட் தேர்வு விலக்கு பெற தீவிர முயற்சி அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி விரைந்தார் அவசரச் சட்டத்துக்கு இன்று (16.08.2017) ஒப்புதல்? | நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு பெறுவதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி விரைந்தார். தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளிக்கும் எனத் தெரிகிறது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அமல்படுத்தப்பட்டது. தமிழக அரசு எடுத்த முயற்சி காரணமாக, கடந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்தது. இதையடுத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீட் மதிப்பெண் அடைப்படையில் நடந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நீட் தேர் வில் இருந்து ஓராண்டு விலக்கு பெறுவதற்கான அவசர சட்ட மசோதாவை சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மத்திய உள்துறை அமைச்சகத் திடம் நேற்று முன்தினம் சமர்ப் பித்தார். இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) விதிகளின்படி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 31-ம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும். அதனால் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் செந்தில்ராஜ், திட்டம் மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கிருஷ்ணன் நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு பெறும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை தயாரிக்கும் பணியும் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே தமிழக அரசு பிறப்பித்த மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத உள்இடஒதுக்கீடு, சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத் திட்ட மாணவர்களுக்கு 15 சதவீத உள்இடஒதுக்கீடு அரசாணையின் படி தரவரிசைப் பட்டியல் தயா ரிக்கப்பட்டது. இந்த அரசாணை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்ற மும் தீர்ப்பளித்தது. அதனால் அந்த தரவரிசைப் பட்டியல் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் பெறும் முயற்சியாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி விரைந்துள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு இன்று ஒப்புதல் வழங்கும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.