
பிளஸ் டூ தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ தேர்வுகள் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ம் தேதிவரை நடைபெற்றன. இதில், 8 லட்சத்து 51 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தேர்வு முடிவுகளை சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in, www.tnresults.nic.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலமாக அறிந்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் முடிவுகளை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தேசிய தகவல் மையத்திலும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பள்ளிகளில் இன்றே பெற்றுக் கொள்ளவும் அரசு தேர்வுகள் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாடவாரியாக இயற்பியல் பாடத்தில் 97.76% மாணவர்கள் தேர்ச்சி,வேதியலில் 98.31% தேர்ச்சி, உயிரியல் பாடத்தில் 98.47 சதவீதம் தேர்ச்சி, கணிதத்தில் 98.8 சதவீதம் தேர்ச்சி, தாவரவியலில் 98.04 சதவீதம் தேர்ச்சி,விலங்கியல் பாடத்தில் 97.77 சதவீதம் தேர்ச்சி, கணினி அறிவியல் பாடத்தில் 99.29 சதவீதம் தேர்ச்சி, வணிகவியலில் 96.41% பெயர்ச்சி, கணக்குப்பதிவியலில் 96.06 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.