தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதையொட்டி, மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் தனித்தேர்வர்கள் உள்பட 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ளனர். அதில் மாற்றுத் திறனாளிகள் 5 ஆயிரத்து 206 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6 பேரும் ஆவர். சிறைவாசிகள் 90 பேரும் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 185 மையங்களில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், தேர்வெழுதும் மாணவர்கள் தயக்கமின்றி தேர்வை அணுக வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னம்பிக்கையும் மனஉறுதியும் இருந்தால், மாணவர்கள் பொதுத்தேர்வில் பாதி வெற்றிபெற்றுவிட்டதாக அர்த்தம் என்றும் கூறியுள்ளார்.
நம்பிக்கையுடனும், சிரத்தையுடனும் அச்சமில்லாமல் பொதுத்தேர்வை எதிர்கொண்டு அனைவரும் வெற்றிபெற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்களும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.