தமிழ்நாடு சாரணர் இயக்க தலைவராக மணி தேர்வு | தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி வெற்றி பெற்றார். இப்பதவிக்கு போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தோல்வி அடைந்தார்.தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் கடைசியாக 2010-ம் ஆண்டு நடந்தது. அதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தலைவர் பதவிக்கு போட்டி உருவாகி, தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.இந்நிலையில், தமிழ்நாடு சாரணர் அமைப்பின் செயற்குழு கடந்த மார்ச் 18-ம் தேதி கூடியது. அதைத்தொடர்ந்து, தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு செப்டம்பர் 16-ம் தேதி தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் போட்டியிட்டனர். தமிழ்நாடு சாரணர் இயக்கத் தலைவர் பதவிக்கு அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் போட்டியிட்டது இதுவே முதல்முறை என்பதால், தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்றபரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில், தலைவர் உள்ளிட்ட மற்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று காலை 10.20 மணியளவில் சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க தலைமையகத்தில் தொடங்கியது. மதியம் 2 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 504 வாக்காளர்களில் 286 பேர் வாக்களித்தனர்.அதைத்தொடர்ந்து வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று, தேர்தல் நடத்தும் அதிகாரி எம்.வி.கலாவதி மாலையில் முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, மொத்தம் பதிவான 286 வாக்குகளில், பி.மணி 232 வாக்குகளும், எச்.ராஜா 52 வாக்குகளும் பெற்றனர். 2 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, பி.மணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பாக எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழ்நாடு சாரணர் இயக்க தேர்தல் தொடர்பாக பாரத சாரணர் இயக்க தலைமையகத்துக்கு பல புகார்கள் சென்றதால் நேற்று முன்தினம் மதியம் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தலைமையகத்திலிருந்து கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், பாரத சாரணர் இயக்கத்தின் தேசிய ஆணையர் உத்தரவு வரும் வரை தேர்தலை நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனவே, இந்த தேர்தல் செல்லாது” என்றார்.தேர்தல் வெற்றிக்குப் பிறகு பி.மணி கூறும்போது, “பள்ளிக் கல்வித்துறை உதவியுடன் சாரணர் இயக்கத்தை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொடங்க நடவடிக்கை எடுப்பேன். இதை பொதுமக்கள் இயக்கமாக மாற்றுவேன் எனவும் உறுதி அளிக்கிறேன்” என்றார்.
Related Stories
December 2, 2024