
பள்ளிக்கல்வி முதன்மை கல்வி அலுவலர்களுடன் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மத்திய அரசு வகுத்துள்ள புதிய கல்விக் கொள்கை சார்ந்து அதன் அடிப்படையில் மாநிலத்திற்கான கல்விக் கொள்கையை உருவாக்க தேவையில்லை. மாநில கல்வி கொள்கையை உருவாக்குவதற்கு தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் சிறந்த வல்லுநர்கள் உள்ளனர். எனவே மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகத்தின் மாநில கல்விக்கொள்கை விளங்கும் என கூறினார்.
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நடத்தி முடிக்கப்படாத பாடங்களிலிருந்து கேள்விகள் இடம் பெறாது என்று கூறினார். தற்போது நடைபெற்று முடிந்துள்ள 2 திருப்புதல் தேர்வுகளில் குறிப்பிட்ட பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் இடம் பெற்றதால் பொதுத்தேர்வில் நடத்தி முடிக்கப்படாத பாடங்களிலிருந்து கேள்விகள் இடம் பெறுவது முறையாக இருக்காது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.