
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
ஆகஸ்ட் 13ஆம் தேதி, தமிழக அரசின் 2021 – 2022ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம், தேர்தலை முன்னிட்டு அதிமுக அரசு இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது. இந்நிலையில், புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு முழு நிலை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். இதற்கு துறைரீதியான ஆய்வுக் கூட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டார்.
திமுக, அரசு பொறுப்பேற்ற பின்னர், அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். வேளாண்மைக்கு முதன் முதலாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் 2021-2022ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்று மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
முன்னதாக, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித் துறை அலுவலர்களுடன், பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, இன்று காலை முதலமைச்சர் தலைமையில் தமிழக பட்ஜெட் தொடர்பான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்தும், தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தேதி குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன்படி வரும் 13ஆம் தேதி தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இந்த ஆண்டு விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.