பயனாளர்கள் முன்கூட்டியே பணத்தை செலுத்திவிட்டால் அவர்களது மொபைலுக்கு கூப்பன்கள் அனுப்பப்படும். கூப்பன் விவரங்கள் அடங்கிய எஸ்.எம்.எஸ்.ஐ சேவை பெறும் இடத்தில் காண்பித்தால் சேவைக்கு ஏற்ப பணம் பிடித்தம் செய்துகொள்ளப்படும்.
இ-ருபி என்ற புதிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
பணப் பரிவர்த்தனையை மேலும் எளிதாக்கும் வகையில் இ-ருபி என்னும் ரசிது முறை பணப் பரிவர்த்தனை வசதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை அறிமுகப்படுத்தி பேசிய பிரதமர், ‘ டிஜிட்டல் ஆளுகைக்கு இன்று புதிய வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நேரடி பயன் பறிமாற்றத்தை ( direct benefit transfer) மிகவும் பயனுள்ளதாக்குவதில் இ-ரூபிஐ ரசிது பெரும் பங்கு வகிக்கப் போகிறது. இலக்கு, வெளிப்படை, மற்றும் தடை இல்லாத விநியோகம் ஆகியவற்றில் இது அனைவருக்கும் உதவும்’ என்று கூறினார்.
மேலும், நாடு சுதந்திரமடைந்ததன் 75வது ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, இந்த திட்டத்தை அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்த மோடி, ‘அரசு மட்டுமல்ல, அரசு சாராத தனி நிறுவனங்கள் கூட, யாருடைய கல்விக்காவது அல்லது மருத்துவச் செலவுக்காக உதவி செய்ய நினைத்தால், அவர்கள் பணமாகக் கொடுப்பதற்கு பதில் இ-ருபி மூலம் பணம் செலுத்தலாம்’ என்று தெரிவித்தார்.
இ-ருபி வசதி என்றால் என்ன?
இந்த முறையில் பணத்தை முன்னரே செலுத்திவிட்டு அதற்கான ரசிதுகளை பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய பணப் பரிவர்த்தனை முறையின் கீழ் பயனாளர்கள் மின்னணு ரசிது அல்லது கூப்பனை பெற்றுக்கொள்ளலாம். இதனை ஆன்லைன் பரிவர்த்தனை, பரிவர்த்தனை செயலிகள் மற்றும் பாரம்பரிய பரிவர்த்தனை முறைகள் போன்றவை இல்லாமலேயே பயன்படுத்தலாம். எளிதாக கூறவேண்டும் என்றால், இது க்யூஆர் குறியீடு அல்லது எஸ்எம்எஸ் அடிப்படையிலான மின்னணு -ரசிது ஆகும். சொடெக்ஸோ (Sodexo) கூப்பன்களை போன்ற தன்மையுடைய இ-ருபி கூப்பன்களை நிதி சேவைகள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய தேசிய கொடுப்பனவு உருவாக்கியுள்ளது.
இ.ருபி வசதியை எப்படி பயன்படுத்துவது?
பயனாளர்கள் முன்கூட்டியே பணத்தை செலுத்திவிட்டால் அவர்களது மொபைலுக்கு கூப்பன்கள் அனுப்பப்படும். அதற்கு முன்பாக பயனாளர்களின் மொபைல் எண், அடையாளம் போன்றவற்றை அரசு சரிபார்க்கும். இதனை பயன்படுத்த மொபைல் பேங்கிங், பணப் பரிவர்த்தனை செயலி ஆகியவை தேவையில்லை என்பதால் சாதாரண மொபைல்போன் வைத்திருப்பவர்கள் கூட இந்த சேவையை எளிதாக பயன்படுத்த முடியும். கூப்பன் விவரங்கள் அடங்கிய எஸ்.எம்.எஸ்.ஐ சேவை பெறும் இடத்தில் காண்பித்தால் சேவைக்கு ஏற்ப பணம் பிடித்தம் செய்துகொள்ளப்படும்.
இ-ருபி சேவையை அளிக்கும் வங்கிகள் பட்டியல்
எவ்வித இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் சேவையை பெறுவதே இ-ருபி முறையின் நோக்கமாக கூறப்படுகிறது. தற்போது பொதுத்துறை மற்றும் தனியாரைச் சேர்ந்த 11 வங்கிகள் இந்த சேவையை வழங்குகின்றன. பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா ஆகியவை இ-ரூபி ரசீது முழுமையாக ஆதரிக்கின்றன. இ-ரூபி கூப்பன்களை இங்கு பெற்றுக்கொள்வதோடு பயன்படுத்துக்கொள்ளவும் முடியும்.
அதேவேளையில், கனரா வங்கி, இன்சுஸ்இண்ட் வங்கி, இந்தியன் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆஃப் இந்தியா ஆகியவை இ-ருபி கூப்பன்களை விநியோகம் மட்டுமே செய்கின்றன. இவ்விடங்களில் இ-ருபி கூப்பன்களை கொடுத்து சேவைகளை பெற முடியாது.