விபத்தில் சிக்கும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நிவாரண தொகை வழங்கும் புதிய திட்டம் இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் அமல் ஆகிறது. விபத்தில் சிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நிவாரண தொகை வழங்கும் புதிய திட்டம், இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படுகிறது. | தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று சென்னையில் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் கொண்டுவரப்படாத புதிய திட்டமாக விபத்தில் சிக்கும் மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கும் முறையை கொண்டு வர முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் தலைமையின் கீழ் செயல்படும் பள்ளிக்கல்வி துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். அதன்படி, பள்ளி மாணவர் விபத்தில் இறந்தால் ரூ.1 லட்சம், பெரிய காயம் ஏற்பட்டால் ரூ.50 ஆயிரம், சிறிய காயம் ஏற்பட்டால் ரூ.25 ஆயிரம் கொடுக்கப்படும் என்றும், இந்த தொகை ‘இன்சூரன்ஸ் பாலிசி’ என்பதன் மூலம் வழங்கப்படுவது கிடையாது என்றும், இந்த தொகை சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். பின்னர் இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 2016-2017-ம் ஆண்டு கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 37 ஆயிரத்து 201 அரசு பள்ளிகளும், 8 ஆயிரத்து 402 அரசு உதவி பெறும் பள்ளிகளும் என மொத்தம் 45 ஆயிரத்து 603 பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் அரசு பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வகுப்புகள் வரை 55 லட்சத்து 73 ஆயிரத்து 217 மாணவ-மாணவிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 29 லட்சத்து 51 ஆயிரத்து 84 மாணவ-மாணவிகளும் பயின்று வருகின்றனர். பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் போதும், வீட்டுக்கு திரும்பும்போதும் உரியபாதுகாப்புடன் சென்றுவரும் பொருட்டு பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இருந்து அவ்வப்போது அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இருப்பினும், பள்ளிக்கு வந்து செல்லும் போதும், கல்வி சுற்றுலா செல்லும் போதும், நாட்டு நலப்பணிகள் திட்டம், தேசிய மாணவர் படை, ஜூனியர் ரெட்கிராஸ், பாரத சாரண, சாரணியர் இயக்கம், சுற்றுச்சூழல் மன்றங்கள் மூலம் நடைபெறும் முகாம் மற்றும் பேரணிகளில் கலந்து கொள்ளும் போதும் மாணவர்களுக்கு விபத்து ஏற்படுகிறது. அதேபோல், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும்போதும், மின்கசிவு, ஆய்வகங்களின் போதும், விஷஜந்துகளாலும், விடுமுறை நாட்களில் நீர்நிலைகளில் குளிக்கும் போதும் மாணவர்களுக்கு விபத்து ஏற்படுகிறது. இதுபோன்ற விபத்துகளின் போது உயிர்ச்சேதம், காயம் அடையும் மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசிடம் பெற்று பள்ளிக்கல்வி துறையின் மூலம் நிவாரணம் வழங்கிட ஆணை வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் அரசை கேட்டுக்கொண்டு உள்ளார். அதன்படி, அரசு, அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் எதிர்பாராத விபத்துகளினால் மரணம் அடைந்தால் ரூ.1 லட்சம், பலத்த காயம் அடைந்தால் ரூ.50 ஆயிரம், சிறிய காயம் அடைந்தால் ரூ.25 ஆயிரம் மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலர்களுக்கு நிவாரண தொகை பள்ளிக்கல்வி துறை மூலம் வழங்கப்படும். இந்த திட்டத்துக்கான செலவினம் ஒரு ‘புதுப்பணித்திட்டம்’ குறித்த செலவினம் ஆகும். இதற்கு சட்டமன்ற பேரவையில் ஒப்புதல் பின்னர் பெறப்படும். ஒப்புதலை எதிர்நோக்கி இச்செலவினம் முதற்கண் எதிர்பாரா செலவின நிதியில் இருந்து முன்பணம் பெறுவதன் மூலம் மேற்கொள்ளப்படும். முன்பணத்தை அனுமதிக்கின்ற ஆணைகள் நிதித்துறையில் தனியாக பிறப்பிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Stories
December 2, 2024