
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பெண் ஊழியருக்கும் பேறுகால விடுப்பு மத்திய பணியாளர் துறை அமைச்சகம் உத்தரவு | ”மத்திய அரசில் பணியாற்றும் பெண் ஊழியர், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றாலும் பேறுகால விடுப்பு வழங்க வேண்டும்” என்று அனைத்துத் துறைகளுக்கும் பணியாளர் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை ஒருவர், வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைக்குத் தாயானார். அவர் பேறுகால விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு விடுப்பு வழங்க முடியாது என்று நிராகரித்துள்ளனர். வாடகை தாய் மூலம் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அவற்றுக்கு உண்மையான தாயாகி விட முடியாது என்பதாலும் விடுப்பு மறுக்கப்பட்டதாக காரணம் கூறப்பட்டது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அந்த ஆசிரியை வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ”வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருந்தாலும், பெண் ஊழியருக்கும் பேறுகால விடுப்பு வழங்க வேண்டும்” என்று கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதுகுறித்து மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் பணியாளர் துறை அமைச்சகம் நேற்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அத்துடன் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு நகலும் இணைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், ”மத்திய அரசில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றாலும், அவருக்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும்” என்று உத்தரவாக கூறப்பட்டுள்ளது. வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் பெண்ணுக்கு அதற்கு முன்பு வேறு குழந்தைகள் இருக்க கூடாது. அத்துடன் வாடகை தாயுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம், மருத்துவர்களின் சான்று போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பம் அளித்தால் 180 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். – பிடிஐ