
நீட் தேர்வுக்கான வயது வரம்புக்கு இடைக்கால தடை டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு | நீட் தேர்வுக்கான வயது வரம்புக்கு இடைக்கால தடை விதித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் ‘நீட்’ தகுதித்தேர்வு, மே மாதம் 6-ந் தேதி நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு எழுத குறைந்தபட்ச வயது வரம்பு 17 ஆக உள்ளது. அதிகபட்ச வயது வரம்பு பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 25 ஆகவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிப்பாணை ஒன்றை இந்த தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ. நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பாணைக்கு எதிராக கேரளாவை சேர்ந்த ஜலாலுத்தீன், சுரேஷ் என்ற 2 மாணவர்கள் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்ததாவது:- நீட் தேர்வுக்கு வயது வரையறை நிர்ணயித்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் சி.பி.எஸ்.இ. மேற்கொண்டிருக்கும் இந்த முடிவு தன்னிச்சையானது. எம்.பி.பி.எஸ். படிப்புக்கு வயது வரம்பு எதையும் விதிக்கக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரானது. இந்த அறிவிப்பாணையால் தொலைதூரக்கல்வி மற்றும் திறந்தவெளி கல்வி நிலையங்களில் படித்தவர்கள், 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை 2 ஆண்டுகளுக்கு மேல் தனிப்பட்ட முறையில் எழுதியவர்கள் ஆகியோர் நீட் தேர்வு எழுத தகுதியற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள். நாங்கள் இருவரும் ஏற்கனவே ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி மருத்துவப்படிப்பை முடித்து இருக்கிறோம். இந்த படிப்பை முடித்து விட்டு மருத்துவ மேல்படிப்புக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வை எழுத வேண்டும் என்றால் அந்த வயது வரம்பு கடந்து விடுகிறது. இந்த அறிவிப்பாணை எங்களை போன்றவர்களுக்கு சமவாய்ப்புக்கான உரிமையை மறுக்கிறது. எனவே நீட் தேர்வுக்கான வயது வரம்பை 25 மற்றும் 30 ஆண்டுகள் என்று வரையறுத்துள்ள அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சந்தர் சேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் சி.பி.எஸ்.இ. வெளியிட்ட அறிவிப்பாணைக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 6-ந் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அன்றுவரை இந்த தடை தொடரும் என்றும் தெரிவித்தனர்.