நடப்பாண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி. தமிழ், ஆங்கிலம் பாடத்தேர்வுகள் ஒரேதாளாக நடத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
பிளஸ்-2, பிளஸ்-1 பொதுத்தேர்வுகளில் தமிழ், ஆங்கிலம் மொழிப்பாட தேர்வுகள் தாள்-1, தாள்-2 என்ற வகையில் நடத்தப்பட்டது. அதை அரசு மாற்றி அமைத்து ஒரே தாள் தேர்வாக நடத்தியது.
அதன் தொடர்ச்சியாக தற்போது எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிப்பாட தேர்வுகளையும் ஒரே தாள் தேர்வாக நடத்த அரசு திட்டமிட்டு இருக்கிறது.
அதற்கான அரசாணையையும் நேற்று பிறப்பித்தது. இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வர்களுக்கு தமிழ், ஆங்கிலம் பாடத்துக்கு 2 தாள்களாக தேர்வுகள் நடத்தப்படுவதை மாற்றி, ஒரே தாளாக தேர்வுகள் நடத்திட வேண்டி ஆசிரியர் சங்கங்கள், பொதுநல அமைப்புகள் முறையிட்டன என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்தார்.
அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. தமிழ், ஆங்கிலம் பாடத்தேர்வுகள் ஒரே தாளாக நடத்தப்படுவதால், அதிக நாட்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்காக செலவிடும் நிலை மாறி கற்பித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டு பணியில் அதிக நேரம் செலவிட ஏதுவாகும். மாணவர்களின் தேர்வு காலம் குறைக்கப்படும். அவர்களின் கவனச்சிதறல், மனஅழுத்தம் பெருமளவில் குறையும்.
விடைத்தாள் மதிப்பீட்டு பணி நடைபெறும் நாட்கள் குறைவதால் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிட வாய்ப்பு ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதுகிறார்கள். ஒரே தாளாக நடத்துவதால் 20 லட்சம் விடைத்தாட்கள் குறையும்.
இதனால் மேற்கண்ட காரணங்களை கருத்தில் கொண்டு தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளுக்கு தமிழ், ஆங்கில பாடத்தேர்வுகளில் 2 தாள்களுக்கு தேர்வு நடத்துவதற்கு பதிலாக 2019-20-ம் கல்வியாண்டு (நடப்பாண்டு) முதல் 2 தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்தப்படும்.
அவ்வாறு தேர்வு நடத்தும்போது பாடங்களின் மதிப்பீடு பாதிக்காதவாறும், முதல் மற்றும் 2-ம் தாள்களில் உள்ள அனைத்து பாடங்களில் உள்ள சாராம்சங்களை உள்ளடக்கியதாகவும் தேர்வுகள் நடத்த அரசு அனுமதியளித்து ஆணையிடுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.