பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி.க்கு நடத்தப்படுவது போல நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வி துறை பல்வேறு அதிரடி மாற்றங்களை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அந்த வகையில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு மதிப்பெண் அடிப்படையில் மாநில அளவில் பட்டியல் வெளியிடப்பட்டு வந்தது. இது மாணவர்களுக்கு பல்வேறு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக, அதை மாற்றி அமைத்தது.
அதன் தொடர்ச்சியாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது போல, பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்தது.
அந்தவகையில், பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய வகுப்புகளுக்கு ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் நேற்று இரவு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009, மத்திய அரசால் இயற்றப்பட்டு, 1.4.2010 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வி துறை 8.11.2011-ல் இதற்கான விதிகள் வகுத்து அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்பின்னரும், மத்திய அரசால் இச்சட்டத்துக்கு அவ்வப்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை திருத்தச்சட்டம் 2019-ல், ‘ஒவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும்.
இந்த தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களை துணை பிரிவு (1) என்று குறிப்பிடவேண்டும். இவ்வாறு தோல்வி அடைந்தவர்களுக்கு தேர்வு முடிவு வெளியாகிய 2 மாதங்களுக்குள் கூடுதல் அறிவுறுத்தல் வழங்குவதோடு, மறு தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.
சம்பந்தப்பட்ட பள்ளிகள் அந்த மாணவர்களை 5-ம் வகுப்பிலோ, 8-ம் வகுப்பிலோ அல்லது இரண்டு வகுப்புகளிலுமோ திரும்ப சேர்த்துக்கொள்வதற்கு அரசு அனுமதிக்கும். இந்த சூழலில் மறு தேர்விலும் அந்த மாணவர்கள் தோல்வி அடைந்தால், துணை பிரிவு (2) என்று குறிப்பிடவேண்டும்.
தொடக்கக்கல்வியை அந்த மாணவர்கள் நிறைவு செய்யும் வரை திரும்ப பெறக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடக்கக்கல்வியை நிறைவு செய்யும் வரையிலும் அந்த மாணவர்களை படிப்பில் இருந்து வெளியேற்றக்கூடாது’ என்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சட்டத்திருத்தமானது 1.3.2019 முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு ஆணையில் அறிவிக்கப்பட்டது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை திருத்தச்சட்டம் 2019-ன்படி பள்ளிக்கல்வி துறையின் கீழ் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும், மாநில பாடத்திட்டத்தினை பின்பற்றும் இதர துறைகளின் கீழ் வரும் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளிலும் 5 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு முதல் அரசு பொதுத்தேர்வு நடத்துவதற்கு தொடக்கக் கல்வி இயக்குனர் அனுமதி கோரி இருந்தார்.
அதன்படி, அரசு பரிசீலனை செய்து அதனை ஏற்று 2019-20 (நடப்பு கல்வியாண்டு)-ம் கல்வியாண்டில் இருந்து 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வியாண்டின் இறுதியில் பொதுத்தேர்வு நடத்திட தொடக்கக்கல்வி இயக்குனருக்கு அனுமதி அளித்தும், அத்தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் எனவும் ஆணையிடப்படுகிறது.
பொதுத்தேர்வு நடத்துவதற்கான உரிய அறிவிப்புகளை வெளியிடவும், நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் கூறுகையில், ‘இந்த அறிவிப்பில் முதல் 3 ஆண்டுகளுக்கு தேர்ச்சியை நிறுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இது மாவட்ட அளவிலான பொதுத்தேர்வாக தான் பார்க்கப்படுகிறது. அதை நாங்கள் வரவேற்கிறோம்.
மாணவர்களுக்கு தேர்வு ஒழுக்கத்தை வலியுறுத்துவதாக இந்த பொதுத்தேர்வு அமையும். அதே நேரத்தில் மாநில அளவில் 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்தால், மாணவர்களின் மனநிலையை பாதிக்கும். அதை கடுமையாக நாங்கள் எதிர்ப்போம். அது கூடாது’ என்றார்.