
சுழற்சி முறையில் (50%) மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு வந்திருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருக்கிறார்கள். இடைநிற்றல் இல்லாமல் மாணவர்கள் தேடி வருகிற சூழ்நிலையை நாம் உருவாக்கி இருக்கிறோம்.
கொரோனா காலத்தில் பெற்றோர் தாங்கள் செய்யும் தொழிலில் உதவியாக தங்களுடைய பிள்ளைகளை அழைத்து செல்வது தெரியவந்தால், தொழிலாளர் நலத்துறையிடம் தெரிவித்து அதை சரிசெய்வோம்.
செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என்று முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். அதில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை வரவழைக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கு நாங்கள் தயார்நிலையில் இருக்கிறோம். அப்போதைய சூழ்நிலைக்கு திறக்கலாம் என்று தெரிவித்தால், உடனே பள்ளிகளை திறந்துவிடுவோம்.
இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். சுழற்சி முறையில் (50 சதவீதம் மாணவர்கள்) மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.
14 மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதனை அடிப்படையாக வைத்து, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் குறித்த விவரங்கள் கேட்கப்பட்டு, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களுக்கு என்ன தேவையோ? அதனை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்படும். முதலமைச்சர், நிதியமைச்சரோடு கலந்து பேசி, மாணவர்களுக்கு விலையில்லா பொருட்களில் எது அவசியமானது? என்பதை ஆராய்ந்து, முடிவு எடுக்கப்படும்.
நீட் தேர்வுக்கு 7 ஆயிரம் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்ததாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டன. கடந்த முறையை விட குறைவு தான். தமிழகத்தை பொறுத்தவரையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் நிலைப்பாடு. சட்டரீதியான போராட்டங்களும் நடந்து வருகிறது.
மாணவர்கள் குழப்பம் அடைந்துவிட கூடாது என்பதற்காக நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் நடந்து வருகிறது.” என்று கூறினார்.