
சென்னை: பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், ஓரிரு தினங்களில் வெளியிடப்படும், என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதற்கேற்ப, செப்., 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசித்துள்ளதாக, முதல்வர் கடந்த வாரம் அறிவித்தார்.
முதலில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை, தினசரி 50 சதவீத மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை கோட்டூர்புரத்தில், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன், அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின், அவர் அளித்த பேட்டி:
தனியார் பள்ளிகளில் இருந்து, 2.04 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள், அரசு பள்ளிக்கு வந்துள்ளனர். அவர்களை தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம். குழந்தைகளை வேலைக்கு அனுப்பினால், அதை தொழிலாளர் நலத் துறையினருக்கு தெரிவித்து, தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
செப்., 1ல் பள்ளிகள் திறக்கப்படலாம் என, முதல்வர் தெரிவித்துள்ளார். அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஏற்கனவே, 14 மாநிலங்களில், குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளி ஆசிரியர்களில், தடுப்பூசி போடாதவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடாதவர்களுக்கு, தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.
&’நீட்&’ தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான், நம் கோரிக்கை. அதை பெற, சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. மருத்துவ படிப்பில் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடந்த முறையை விட இந்த முறை, நீட் தேர்வுக்கு குறைவான நபர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இன்னும் கால அவகாசம் கொடுப்பதால், விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும். மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.