TNTET தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் (60% வெயிட்டேஜ் ), தேர்வர்கள் பெற்ற கல்வி தொகுதிக்கான மதிப்பெண்ககள் அடிப்படையிலும் (40% வெயிட்டேஜ்) அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனங்கள் நடைபெற்று வருகிறது.
அரசுப் பள்ளிகளில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய வரும் டிசம்பர் மாதம் போட்டித் தேர்வு தனியாக நடத்தப்படும் என்றி ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியராக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். அரசுப் பள்ளிகளைப் பொறுத்த வரையில், டெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் (60% வெயிட்டேஜ் ), தேர்வர்கள் பெற்ற கல்வி தொகுதிக்கான மதிப்பெண்ககள் அடிப்படையிலும் (40% வெயிட்டேஜ்) அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நியமனத்தில் போது பின்பற்றப்படும் வெயிட்டேஜ் முறை காரணமாக, பல ஆண்டுகளுக்கு முன்னர் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் கல்வித் தகுதிக்கான மதிப்பெண் தற்போது தேர்ச்சிப் பெற்றவர்களின் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்களுடன் ஒப்பிடுகையில் சமமற்ற சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசுப் பள்ளிகளில் நியமனங்கள் பெற முடியாத இதர தேர்வர்களின் மனச் சுமையை குறைக்கும் பொருட்டு, டெட் தேர்வை ஆசிரியர்களின் தகுதியை நிர்ணையிக்கும் தனித் தேர்வாகவும், அரசுப் பள்ளிகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு அதற்கென போட்டித் தேர்வை (Competitive Examination – டிஎன்பிஎஸ்சி தேர்வைப் போன்று) நடத்த தமிழக அரசு முடிவெடுத்தது. கடந்த 2018ம் ஆண்டு, இதற்கான அரசாணையும் (எண். 149) வெளியானது.