ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் செப்டம்பர் 5-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர் தினத்தின்று, குடியரசுத் தலைவர் கையால் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. கற்பித்தல் முறையில் தனிச்சிறப்புடன் விளங்கும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை நல்லாசிரியர் விருதை வழங்கி வருகிறது.
பள்ளி வருகைப் பதிவேடு, மாணவர்கள் நலனில் அக்கறை, ஆராய்ச்சிக் கட்டுரை, இடைநிற்றல் குறைபாடுகளை குறைத்தல் போன்ற புறநிலை வகை மதிப்பீடு மூலமாகவும், படைப்பாக்கம், இணை பாடத்திட்டங்களில் புத்தாக்கம், தேச வளர்ச்சிக்கான பணிகள் போன்ற செயல்திறன் மதிப்பீடு அடிப்படையிலும் நல்லாசிரியர் விருது பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்தாண்டு விருதுக்கு, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு கிட்டத்தட்ட 3 அடுக்கு ஆய்வுக்குப் பின் நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் தமிழ்நாட்டில் இருந்து, ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் செப்டம்பர் 5-ஆம் தேதி பிரதமர் கலந்துரையாடுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தங்களது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல் தங்கள் மாணவர்களின் வாழ்வையும் வளமாக்கிய நாட்டின் தலைசிறந்த ஆசிரியர்களின் தனித்துவம் வாய்ந்த பங்களிப்பை கொண்டாடுவது, கௌரவிப்பது ஆகியவை தேசிய ஆசிரியர் விருதின் நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளது.