சிஎஸ்ஐஆர் (அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழு) தலைமை இயக்குநர் பதவிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமாக விளங்கும் சிஎஸ்ஐஆர் குழுவில் பெண் ஒருவர் தலைமை இயக்குநராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி தமிழ்வழிக்கல்வியில் பயின்றவர். தற்போது , காரைக்குடி சிஎஸ்ஐஆர்-சிஈசிஆர்ஐ ( மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனம்) நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
சிறப்பு மின்தேக்கி (Super Capacitor), மின்முனை (Electrode) போன்ற துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். லித்தியம்-அயன் பேட்டரி ஆராய்ச்சியில் நன்கு அறியப்பட்டவர். மத்திய அரசின் இந்திய மின்சார வாகனங்களின் திட்டத்தில் இவரின் பங்களிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
முந்தைய தலைமை இயக்குநர் டாக்டர் சேகர் மாண்டேவின் பதவிக் காலம் கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றதையடுத்து, உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் ராஜேஷ் கோகல் சிஎஸ்ஐஆர் குழுவின் கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், சிஎஸ்ஐஆர் (அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழு) தலைமை இயக்குநர் பதவிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் (Department of Scientific and Industrial Research) செயலாளராகவும் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கலைச்செல்விக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான சிஎஸ்ஐஆர்-ன் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற சிறப்பைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி அடைந்திருக்கிறார். வாழ்த்துகள்!
தமிழ்வழிக்கல்வி அறிவியலைக் கற்றுணரத் தடையாகாது என்பதற்குக் கலைச்செல்வியின் இந்தச் சாதனையே சிறந்த சான்று!” என்று தெரிவித்தார்.
மேலும், பல்வேறு அரசியல் தலைவர்களும், அறிவியல் ஆர்வலர்களும், பெண்ணிலைவாதிகளும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தி வருகின்றனர்.