கிரிக்கெட் வீரர் டோனிக்கு பத்மபூஷண் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது மத்திய அரசு அறிவிப்பு | கலை, அறிவியல், மருத்துவம், சமூகசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மத்திய அரசு ஆண்டு தோறும் தேர்ந்து எடுத்து பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த ஆண்டில் பத்ம விபூஷண் விருது 3 பேருக்கும், பத்ம பூஷண் விருது 9 பேருக்கும், பத்மஸ்ரீ விருது 73 பேருக்கும் வழங்கப்பட்டு உள்ளது. மொத்தம் 85 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். கலைத்துறையில் சிறந்த சேவை ஆற்றியதற்காக இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு ஏற்கனவே கடந்த 2010-ம் ஆண்டு இளையராஜாவுக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்தது. இப்போது பத்ம விபூஷண் விருது வழங்கி இருக்கிறது. விருது பெற்றது குறித்த மகிழ்ச்சி தெரிவித்த இளையராஜா, அதை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வேன் என்றும் கூறினார். இசைத்துறையைச் சேர்ந்த குலாம் முஸ்தபா கான் (மராட்டியம்), இலக்கியம் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த பரமேஸ்வரன் (கேரளா) ஆகியோரும் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். பத்ம விபூஷண் விருது பெற்ற இளையராஜாவுக்கு ஏராளமான திரையுலக பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்திலும் வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் துறை ஆய்வாளர் நாகசாமி, பிரபல கிரிக்கெட் வீரர் டோனி, கர்நாடகத்தைச் சேர்ந்த பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரர் பங்கஜ் அத்வானி உள்ளிட்ட 9 பேருக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கி இருக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலை அமைக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த மதுரை தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் பேராசிரியர் ராஜகோபாலன் வாசுதேவன், மதுரையைச் சேர்ந்த கிராமிய பாடல் இசை கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், கோவையைச் சேர்ந்த 98 வயதான யோகா பயிற்சி நிபுணர் நானாம்பாள், வனவிலங்கு பாதுகாவலர் ரோமுலஸ் விட்டாகர், பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடித்த கேரளாவைச் சேர்ந்த பழங்குடியின பெண் லட்சுமிகுட்டி (வயது 75), வலிநிவாரணி மருந்து கண்டுபிடித்த எம்.ஆர்.ராஜகோபால் (70) ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு உள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த, விவசாய வேலை செய்துவரும் மூதாட்டி சுலாகட்டி நரசம்மாவும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறார். போதிய மருத்துவ வசதிகள் இல்லாத பின்தங்கிய பகுதியில் வசித்துவரும் இவர் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான பெண்களுக்கு கட்டணம் எதுவும் வாங்காமல் பிரசவம் பார்த்து வருகிறார். பத்ம விருது பெற்றவர்களில் 14 பேர் பெண்கள்; 16 பேர் வெளிநாடுகளில் வசிப்பவர்கள். மரணம் அடைந்த 3 பேருக்கும் விருது வழங்கப்பட்டு உள்ளது. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பின்னர் நடைபெறும் விழாவில், பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குவார்.