
வாரத்திற்கு 6 நாட்கள் வீதம், ஒரு நாளைக்கு 5 பாடப்பிரிவுகளாக பிரித்து வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பள்ளிகள் இன்று (செப்டம்பர் 1) முதல் திறக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஒவ்வொரு பள்ளிக்கூடங்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க அறிவுறுத்தி இருக்கிறோம். கண்டிப்பாக மாணவர்கள் முக கவசம் அணிந்துவர கூறியிருக்கிறோம். அவர்கள் அணிந்துவர மறந்துவிட்டாலோ, அணிந்து வந்த முக கவசம் சேதம் அடைந்துவிட்டாலோ பள்ளிகளில் வழங்க அறிவுறுத்தியுள்ளோம்.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், வகுப்பறையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சானிடைசர்ஸ் வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. ஒரு மேஜையில் 2 மாணவர்கள் அமரும் வகையில்தான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் தமிழ்நாடு முழுவதும் செய்யப்படும்.
வாரத்திற்கு 6 நாட்கள் வீதம், ஒரு நாளைக்கு 5 பாடப்பிரிவுகளாக பிரித்து வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை 6 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன. இதில் உடற்கல்வி வகுப்புகள் கிடையாது. எல்லா விஷயத்தையும் கருத்தில் கொண்டு தான் நடவடிக்கை எடுத்துள்ளோம். பெற்றோர், மாணவர்கள் பயப்பட வேண்டாம்.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தவில்லை. நீங்கள் அக்கறையோடு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவையுங்கள். நாங்கள் பாதுகாப்பை உறுதி செய்கிறோம். பள்ளி திறந்ததும் முதல் 40 முதல் 45 நாட்கள் புத்துணர்ச்சி பாடங்கள் தான் மாணவர்களுக்கு கற்றுத்தரப்பட இருக்கின்றன. இந்த நாட்களில் வீட்டுப்பாடம் எழுத வைக்கப்போவது இல்லை.
குழந்தைகளை மகிழ்ச்சியோடு வரவழைத்து புத்துணர்ச்சி பாடங்களை நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். மாணவர்களின் உடல்நிலை தான் முக்கியம். தடுப்பூசி போட்ட ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வரவேண்டும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.