பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஹோபார்ட் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார்.
பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஹோபார்ட் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளி வளாகங்களில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களை மனரீதியாக தயார்படுத்தும் வகையில் வகுப்புகளில் 45 தினங்களுக்கு புத்துணர்வு வகுப்புகளை மட்டுமே ஆசிரியர்கள் எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். கொரோனா காலகட்டத்தில் பள்ளி கட்டணம் செலுத்தினால் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளி நிர்வாகங்கள் தெரிவிப்பது குறித்து உரிய புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
மேலும் பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் இருக்காது என்று தெரிவித்த அவர் அவ்வாறு மாற்றினால் மாணவர்களிடம் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் தற்போது இருக்கின்ற வினாத்தாள் நடைமுறையே தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.