NO CHANGE IN NEET-2018 SYLLABUS- CBSE-மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை மத்திய கல்வி வாரியம் அறிவிப்பு | மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை என்று மத்திய கல்வி வாரியம் அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை (எம்.பி.பி.எஸ்.), ‘நீட்’ என்று அழைக்கப்படுகிற தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. முதல் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டைப் பொறுத்தமட்டில், ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான், தமிழ்நாட்டிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ‘நீட்’ தேர்வில் கேள்வித்தாள், சி.பி.எஸ்.இ. என்று அழைக்கப்படுகிற மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது மாநில கல்வித்திட்டத்தின் கீழ் படிக்கிற மாணவர்களுக்கு சவாலாக அமைந்து உள்ளது. அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிற நிலை இருக்கிறது. இந்த நிலையில், நடப்பு 2018-ம் ஆண்டு ‘நீட்’ தேர்வில் மாநில பாடத்திட்டதையும் இணைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ‘நீட்’ தேர்வில் மாநில பாடத்திட்டங்களையும் சேர்த்து கேள்வித்தாள் தயாரிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இதனால் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு பின்னடைவாக இருக்காது. அனைத்து மாநில மாணவர்களுக்கும் ‘நீட்’ தேர்வு சமமாக இருக்கும். இதன்மூலம், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் பிரச்சினை முடிவுக்கு வரும். இனி இதுகுறித்து யாரும் குற்றம்சாட்ட முடியாது” என குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகின ஆனால் நாடு முழுவதும் நடப்பு 2018-ம் ஆண்டு, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வுக்கான பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று, அந்த தேர்வை நடத்துகிற மத்திய கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ. தனது இணையதளத்தில் திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. 2017-ம் ஆண்டு ‘நீட்’ தேர்வில் பின்பற்றப்பட்ட அதே பாடத்திட்டம்தான் 2018-ம் ஆண்டிலும் பின்பற்றப்படும் என தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. எனவே அதற்கு தயார் ஆவதைத் தவிர தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வேறு வழி இல்லை.